"கம்பராமாயணம்- வாலி வதைப் படலம் "

வாலி, இராமன் உரையாடல்

இராமன் சொன்னவை தக்கவை அல்ல என்று வாலி கூறுகிறான் 111

ஐய! உங்கள் குல மகளிர்க்கு அமைந்த கற்புப் புணர்ச்சி போல் பிரமன் எங்களுக்கு நெறியினைப் படைக்கவில்லை 112

எங்களுக்குத் திருமணம் என்னும் ஒழுக்க நெறி இல்லை.
களவு வழி வந்த கற்பும் இல்லை. 
உணர்ச்சி வழியில் வருவதுதான் எங்கள் ஒழுக்கம் 113

எங்கள் நெறி வழி நான் குற்றமற்றவன் 
நீ அதனைக் குற்றம் என்று கருதுகிறாய் - என்றான் வாலி 114

தேவர்க்கு (இந்திரனுக்கு) பிறந்தவன் நீ. 
அறநெறி கண்டவன் நீ. 
நீ விலங்கு அல்லை 115

அறத்தாறு என்பது பொறி உணர்வில் இருக்கிறதா 
புலன் அறிவில் இருக்கிறதா 
நீ புலனறிவு உடையவன் 116

பெருமை மிக்க உணர்வுப் பயனால் வீடு-நெறி கண்ட நீ விலங்கு அன்று 117

சிந்தை அறத்தின் வழியில் சென்றதால், எந்தை கழுகரசன் சடாயு, விலங்கு அன்று 118

நன்று, தீது அறியாமல் வாழ்வது அன்றோ விலங்கு. 
நீ நன்னெறி அறிந்தவன் ஆயிற்றே 119

தக்கவை இவை, தகாதவை இவை என்று பகுத்துணரா விட்டால் மக்களும் விலங்கே. 
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (கல்லாமை குறள் எண்:410)
உணர்ந்து நடந்துகொண்டால் அவர்கள் புத்தேளிர் (தேவர்) - என்றான் இராமன் 120

பாடல்

'பிழைத்த தன்மை இது' எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது
இழைத்த வாலி, 'இயல்பு அல, இத் துணை
விழைத் திறம், தொழில்' என்ன விளம்புவான்: 111

'ஐய! நுங்கள் அருங் குலக் கற்பின், அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
செய்திலன், எமைத் தே மலர் மேலவன்;
எய்தின் எய்தியது ஆக, இயற்றினான். 112

'மணமும் இல்லை, மறை நெறி வந்தன;
குணமும் இல்லை, குல முதற்கு ஒத்தன;-
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்-
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்! 113

'பெற்றி மற்று இது; பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலன்; நீ, அது கோடியால்-
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய்!' எனச்
சொற்ற சொல் துறைக்கு உற்றது, சொல்லுவான்: 114

'நலம் கொள் தேவரின் தோன்றி, நவை அறக்
கலங்கலா அற நல் நெறி காண்டலின்,
விலங்கு அலாமை விளங்கியது; ஆதலால்,
அலங்கலார்க்கு, ஈது அடுப்பது அன்று ஆம் அரோ. 115

'பொறியின் யாக்கையதோ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ, அறத்தாறுதான்?
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ, பிழை உற்றுறு பெற்றிதான்? 116

'மாடு பற்றி இடங்கர் வலித்திட,
கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால்,
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ? 117

'சிந்தை, நல் அறத்தின் வழிச் சேறலால்,
பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான்,
வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும், எருவைக்கு அரசு அல்லனோ? 118

'நன்று, தீது, என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ, விலங்கின் இயல்?
நின்ற நல் நெறி, நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால். 119

'தக்க இன்ன, தகாதன இன்ன, என்று
ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்களும், விலங்கே; மனுவின் நெறி
புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே. 120