" மணிமேகலை "
உலக அறவி என்பது ஊர்ப் பொதுமன்றமாகும். பெரிய வாயில்களும், கூடங்களும், அமர்வதற்கும் உண்பதற்குமான நீண்ட பகுதிகளும் உள்ள இடம். மணிமேகலை பசிப்பிணியால் வாடும் வறியவர்களுக்கு அங்கு அன்னதானம் வழங்கப்போகிறாள் என்ற செய்தி காட்டுத்தீபோல நகரெங்கும் பரவிற்று. அறவண அடிகள் ஏழெட்டு புத்தபிக்குகளையும் தேவையான கலன்களையும் தமது புத்தமடத்திலிருந்து அனுப்பியிருந்தார். ஆதிரை இட்ட உணவு வற்றாமல் சுரப்பதை மணிமேகலை ஏற்கனவே பரிசோதித்துப் பார்த்துவிட்டாள். எல்லா உணவுப்பதார்த்தங்களும் அப்போது சமைத்து இறக்கியது போன்ற சுவையும், மணமும் மாறாமல் இருந்தன. “மணிமேகலா! வாசலில் நெறியும் கூட்டத்தைப் பார்த்தாய் அல்லவா? அவர்களுக்கு உணவு அளிக்க ஏன் இத்தனை தாமதம்?”என்று உள்ளே நுழைந்த மாதவி கேட்டாள். “கொஞ்ச நேரம் பொறு, அம்மா,”என்ற மணிமேகலை, சாளரத்திலிருந்து வாயிலையும் தாண்டிப் பார்வையை ஓடவிட்டாள். “இன்னும் வருவதற்கு யாரம்மா இருக்கிறார்கள்?”என்று கேட்ட மாதவியின் கேள்வியில் பொறுமை அதன் முதல் பிரியை இழந்திருந்தது. “முதல் தானத்தைப் பத்தினிப்பெண்ணான ஆதிரை இட்டதைப்போல முதல் கொடையைப் பெற்றுக் கொள்ள யார...