"கம்பராமாயணம்- வாலி வதைப் படலம் "
வாலியுடன் போர் - திட்டமிடல்
தமாலம், ஏலம் செழித்திருக்கும் காட்டின் வழியே இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமான், குரங்குப் படை அனைவரும் சென்றனர் 1
சந்தனம், சண்பகம் மிக்க சோலை வழியில் சென்றனர் 2
வண்டுகள் இசை பாடின
மேகங்கள் மேனியில் மேய்ந்தன 3
மான் ஆளி வேங்கைகள் அங்குமிங்கும் ஓடின 4
யானைகள் சினந்து போரிட, தேன் சிதைந்து ஒழுகி வழுக்கிற்று 5
வெயிலைத் தணிக்கப் புனல் ஓடிற்று 6
வாவிகளில் வனருவி பாயும்
ஏனலில் குருவி பாயும்
எங்கும் மந்தி பாயும் 7
எங்கும் ஏலம் மணந்தது 8
10 யோசனை தொலைவு கடந்து வாலி இருக்கும் மலைச்சாரல் வந்தடைந்தனர்
என்ன செய்யலாம் என்று எண்ணினர் 9
வாலியை அழைத்துப் போரிடு
அப்போது வாலிமீது நான் அம்பு எய்வேன் என்றான் இராமன் 10
பாடல்
வெங் கண் ஆளிஏறும், மீளி மாவும், வேக நாகமும்,
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார்,
தங்கு சாலம், மூலம் ஆர் தமாலம், ஏலம், மாலைபோல்
பொங்கு நாகமும், துவன்று, சாரலூடு போயினார். 1
உழை உலாம் நெடுங் கண் மாதர் ஊசல்; ஊசல் அல்லவேல்,
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல்; சாரல் அல்லவேல்,
மழை உலாவு முன்றில்; அல்ல, மன்றல் நாறு சண்பகக்
குழை உலாவு சோலை; சோலை அல்ல, பொன் செய் குன்றமே 2
அறங்கள் நாறும் மேனியார், அரிக் கணங்களோடும், அங்கு
இறங்கு போதும், ஏறு போதும், ஈறு இலாத ஓதையால்,
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப, முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம், நன்கு உணர்ந்து, மாசு மீது உலாவுமே. 3
நீடு நாகமூடு மேகம் ஓட, நீரும் ஓட, நேர்
ஆடு நாகம் ஓட, மானை யானை ஓட, ஆளி போம் -
மாடு நாகம் நீடு சாரல், வாளை ஓடும் வாவியூடு
ஓடு நாகம் ஓட, வேங்கை ஓடும், யூகம் ஓடவே. 4
மருண்ட மா மலைத் தடங்கள் செல்லல் ஆவ அல்ல - மால்
தெருண்டிலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால்,
இருண்ட காழ் அகில், தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்டபோது, அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே! 5
மினல் மணிக் குலம் துவன்றி, வில் அலர்த்து, விண் குலாய்,
அனல் பரப்பல் ஒப்ப, மீது இமைப்ப, வந்து அவிப்பபோல்
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் -
இனைய வில் தடக் கை வீரர் ஏகுகின்ற குன்றமே. 6
மருவி ஆடும் வாவிதோறும் வான யாறு பாயும், வந்து;
இருவி ஆர் தடங்கள் தோறும் ஏறு பாயுமாறுபோல்,
அருவி பாயும்; முன்றில், ஒன்றி யானை பாயும்; ஏனலில்,
குருவி பாயும்; ஓடி, மந்தி கோடு பாயும் - மாடு எலாம். 7
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின், மீது செல்லும் நாள் -
மீன் இழுக்கும்; அன்றி, வான வில் இழுக்கும்; வெண் மதிக்
கூன் இழுக்கும்; மற்று உலாவு கோள் இழுக்கும்; என்பரால் -
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே. 8
அன்னது ஆய குன்றின் ஆறு, சென்ற வீரர், ஐந்தொடு ஐந்து
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி, இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன, வாலி வாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள்; 'செய்வது என்னை?' என்று நின்று சொல்லுவார்: 9
அவ் இடத்து, இராமன், 'நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று,
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது' என்றனன்;
தெவ் அடக்கும் வென்றியானும், 'நன்று இது' என்று சிந்தியா, 10